Tuesday 28 July 2020

சிவபுராணம் ( 67 )

67,  கிரஹபதி பெற்ற அனுக்கிரகம் 




நர்மதா நதி தீரத்தில், சாண்டில்ய கோத்திரத்தில் விச்வாநரர் என்ற வேதியர் பிறந்தார். அவர் சக்ஷூஷ்மதி என்னும் பெண்ணை மணந்து கொண்டார், தம்பதிகள் இருவரும் காசி விஸ்வநாதரை மிகவும் பக்தியுடன் ஆராத்தித்து வந்தனர்.

விச்வாநரருக்கு பகவானிடம் அளவில்லாத பக்தி. ஒரு நாள், பகவானைத் துதித்து, அவர் பெருமையை எட்டு  ஸ்லோகங்களால் வர்ணித்தார். அபிலாஷ்டகம் எனப் பெயர் பெற்றது அந்த ஸ்துதி. சிவபெருமான், அந்த ஸ்துதியால் பெரிதும் மகிழ்ந்தவராய், விச்வாநரரருக்குக் காட்சி தந்து “ நானே உனக்குப் புத்திரனாகத் தோன்றுவேன்” என்று அனுக்கிரகித்தார்.

அவ்வாறே, விச்வாநரருக்கு ஆண் மகவு பிறந்தது. பெரிதும் மகிழ்ச்சியுற்ற அவர், தன் குழந்தைக்கு, வைச்வாநரன் அல்லது கிருஹபதி என்னும் பெயரிட்டுக் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தார்.

அந்த சமயம், நாரதர், விச்வாநரரிடம் வந்தார். நாரதரை வரவேற்று உபசரித்து, குழந்தையை எடுத்து வந்து ஆசீவாதன் செய்யுமாறு கோரினார், விச்வாநரர். குழந்தையைப் பார்த்ததும் நாரதரின் முகம் வாட்டமுற்றது.

“ மஹரிஷே !  ஏன் இந்த முக வாட்டம் ? “ என்று பதட்டத்துடன் கேட்டார், விச்வாநரர்.
“  நான் என்ன சொல்வேண் ? குழந்தையை ஆசீர்வதிக்குமாறு வேண்டினாய் ! குழந்தைக்கோ ஆயுள் ஆறு வயதுதான். ஆறாம் வயதில், இவன் இடி மின்னலால் தாக்குண்டு உயிரிழப்பான்….  “ என்றார் நாரதர்.
நாரதரரின் வார்த்தைகளைக் கேட்ட விச்வாநரர், மிகவும் வேதனைக் கொண்டவராய், “ மஹரிஷே…. விஸ்வநாதன்  எனக்குப் புத்திரனாகத் தோன்றுவதாக அனுக்கிரகித்துள்ளார். ஆனால், இந்தக் குழந்தைக்கு ஆறாவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று தாங்கள் கூறுகிறீர்களே… நான் என்ன செய்வேன் ? இந்தக் கஷ்டத்தில் இருந்து மீள வழியே இல்லையா ? “எனக் கேட்டார்.

‘ நீ ஆராதிக்கும் காசி விஸ்வநார்ஹனையே பரிபூரணமாக நம்பு. அவர் அனுக்கிரகிப்பார் “ என்று சொல்லிவிட்டுச் சென்றார், நாரதர்.

விச்வாநரர், அதுமுதல் சதா நாரதரின் வார்த்தைகளையே நினைத்து நினைத்து வருந்தினார். துக்கம் அதிகரித்துக் கொடே வந்தது. மகனை இழக்க வேண்டிய நாள் நெருங்கி வருகிறதே என்று எண்ணிக் கவலை கொண்டார்.

ஒரு நாள் வருத்தத்துடன் அமர்ந்திருந்த தந்தையைக் கண்ட குமாரன், அவரை நெருங்கி அவர் கவலைப்படுவதற்கானக் காரணத்தைக் கேட்டான். விச்வாநரரும் தன் மனக் கவலையை அவனிடம் கூறினார்.

“ அப்பா !  இதற்காகவா கவலைப்படுகிறீர்கள் ? நானோ காசி விஸ்வநாதரின் அருளால் பிறந்தவன் என்கிறீர்கள். அந்த விஸ்வநாதரின் அனுக்கிரகத்தாலேயே நீண்ட ஆயுளைப் பெற்றுத் திரும்புவேன் “ என்று தந்தையிடம் அனுமதி கேட்டான், கிரஹபதி.

“ குழந்தாய்.. ! வேண்டாம் ! நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். உன்னை இழ்ழ்ந்து துக்கிக்க வேண்டும் என்று விதிக்கப்படிருப்பதை நாம் மாற்ற முடியுமா “ என்றார் தந்தை.

கிருஹபதி தன் எண்ணத்தில் உறுதியாய் இருந்தான். பிடிவாதமாகத் தந்தையிடம் அனுமதி பெற்றுக் காசியை அடைந்த கிருஹபதி, காசியில் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து, சிவபெருமானைக் குறித்து தவம் மேற்கொண்டான்.

சிறுவனின் தவத்தை மெச்சிய சிவ பெருமான், அவனுக்கு அனுக்கிரகம் செய்ய எண்ணம் கொண்டார். அதற்கு முன் அவனைப் பரீட்சிக்க எண்ணினார். இந்திரனாக உருவெடுத்து அவன் முன் தோன்றி, “ குழந்தாய் ! உன் தவத்தை மெச்சினேன் ! நீ வேண்டும் வரம் யாது? “ என்றார் சிவ பெருமான்.

கண் திறந்துப் பார்த்த கிருஹபதி, தன் எதிரில் இந்திரனைக் கண்டு “ ஐயா… ! நான் உம்மைக் குறித்து தவம் செய்யவில்லை. நான் விரும்பும் வரத்தை உம்மால் அளிக்க முடியாது “ என்று கூறி, கண்களை மூடிக் கொண்டான், கிருஹபதி.
“ அடே .. நான் வந்து கேட்கும்போது மறுக்கிறாயே ! உனக்கு அத்தனை ஆணவமா ? வரத்தைக் கேட்கிறாயா, இல்லையா ? இல்லையேல், இப்போதே வஜ்ராயுதத்தால் உன்னை அடித்துக் கொன்று விடுவேன் “ என்றார் ஈசன்.

கலகல வென்று நகைத்தான் சிறுவன்

“ ஐயா, நான் யார் என்பதை அறியாமல் பேசிகிறீர்கள். நான் சிவனைக் குறித்துத் தவம் செய்யும் சின்னஞ் சிறு சிவபக்தன்! உமது வஜ்ராயுதம் சிவபக்தர்களை ஒன்றும் செய்யாது என்பது நீங்கள் அறியாதது அல்ல ! “ என்றான் கிருஹபதி.

பகவானின் உள்ளம் நிறைந்தது. அடுத்த கணம், பார்வதியுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார், சிவபெருமான்.

“ குழந்தாய்.. ! உன் விருப்பம் நிறைவேறும், என்றும் அழிவின்றி, என் சரீரமான அக்னியாய் விளங்குவாய். இந்திரனுக்கும், இயமனுக்கும் இடையில் உள்ள திக்குக்கு நீ தலைவனாக இருப்பாயாக! வேதியர் உன்னை கிருஹபதி என்று கார்ஹபத்தியத்தில் பூஜிப்பர் “ என்று  அனுக்கிரகித்து மறைந்தார்.

அவ்வாறே, கிருஹபதி அனைவராலும் போற்றப்பட்டு அழியாப் பெருமையை அடைந்தார்.

நமீச ஆரண்ய வனத்து முனிவர்களுக்குச் சிவபெருமானின் மஹாத்மியங்களை எடுத்துரைத்து வந்த சூதர், அவர்களைப்  பார்த்து மேலும் சொல்லத் தொடங்கினார்.

“ அன்பார்ந்த முனிவர்களே !  கைலாச நாதனின் மகிமைகளை எவ்வளவு அடுத்துச் சொன்னாலும் போதாது ! அதற்கு முடிவே இல்லை ! தம்மை ஆராதிப்பவரை அவர் ஒருபோதும் கை விடுவதில்லை.  தம்மை பூஜிப்பவர்களின் கஷ்டங்களை நீக்கி, சகல நன்மைகளையும் அளிக்கின்றார்,

பகவானைப் பூஜித்து நன்மைகளை அடைந்தவர்களின் சரித்திரத்தைக் கேட்டீர்கள். இன்னும் எத்தனை எத்தனையோ பேர்கள் அவரை ஆராதித்து நற்கதி அடைந்துள்ளனர்,

சதமகன் என்னும் அரசன் சிவபெருமானைக் குறித்து நூறு வருஷம் தவம் செய்து, அவர் அனுக்கிரகத்தால் ஆயிரம் நகரங்ககை அடைந்தான்.

யாஞ்ஞால்கியர் என்னும் முனிவர் பகவானை ஆராதித்து, உத்தம ஞானத்தை அடைந்தார். வாலகில்லியர் பகவானின் அனுக்கிரகத்தால் ஒருவராலும் வெல்ல முடியாத கருடனை வெற்றி கண்டார். இன்னும் எத்தனை எத்தனையோ? முடிவே இல்லை எனலாம். சர்வகாரண பூதரானச் சர்வேஸ்வரனை நீங்கள் ஏகாக்கிரக சிந்தனையுடன் ஆராதித்து, அவர் அருள் பெற்று சகலவிதமான நன்மைகளுடன் வாழ்ந்து வருவீர்களாக “  என்று தவது புராண பிரவசனத்தை முடித்தார், சூதர்.

ஆரண்யம் முழுவதும் கிடுகிடுக்க, சிவ கோஷம் எழுப்பிய முனிவர்கள், அதன் தெய்வீக நாதத்தில் ஒன்றி, தங்கள் உள்ளங்களில் பகவானின் திருமேனியை நிறுத்தி, அதன் தரிசனத்தில் மெய் மறந்து நின்றனர்.


ஹரி ஓம் சிவாய நம :

சிவபுராணம் முற்றிற்று.







Monday 27 July 2020

சிவபுராணம் ( 66 )

66. அத்ரி முனிவருக்கு அருளுதல்


அத்ரி முனிவர் வமிச விருத்திக்காகப் பரமசிவனை குறித்துத் தவம் செய்தார். அவர் முன்பு மும்மூர்த்திகளும் ஒருங்கே தோன்றித் தரிசனம் கொடுத்தனர். நான் பரமசிவனைக் குறித்துத் தானே தவம் செய்தேன். மூவரும் வந்திருக்கிறீர்களே" என்று ஆச்சரியத்தோடு கேட்டார் முனிவர்.

நாங்கள் மூவரும் ஒருவரே அன்றி வேறல்லர். எங்கள் மூவருடைய அம்சங்களாக உமக்கு மூன்று பிள்ளைகள் உண்டாவார்கள்" என்று அனுக்கிரகித்துச் சென்றனர் மும்மூர்த்திகளும். சிவனுடைய அருளால் துர்வாசரும்விஷ்ணுவின் அருளால் தத்தாத்ரேயரும். பிரம்மதேவன் அருளால் சந்திரனும் முனிவருக்கு உண்டானார்கள்.
துர்வாசர் மிகுந்த சிவபக்தர். அருகம் புல்லால் அவர் ஜலத்தை அருந்தியதால் துர்வாசர் என்ற காரணப்பெயரைப் பெற்றார். சிவபெருமானின் அனுக்கிரகம் அவருக்குப் பரிபூரணமாகக் கிட்டியிருந்தது. சாபம் அளிக்க அளிக்க அவர் தவம் பெருகும்.

ஒருசமயம் அவர் நதியில் நீராடிக் கொண்டிருக்கும் போது பிரவாகத்தின் வேகத்தில் அவர் அணிந்திருந்த வஸ்திரம் இழுத்துக் கொண்டு போகப்பட்டுவிட்டது. இடுப்பில் வஸ்திரம் இல்லாமல் வெளியே வர வெட்கப்பட்டுக் கொண்டு அவர் வெகு நேரம் ஜலத்திலேயே நின்றார்

இதை அறிந்த திரௌபதி உடனே தன் பட்டு வஸ்திரத்தைக் கிழித்து அவரிடம் செல்லுமாறு பிரவாகத்தில் விட்டாள். அதை அணிந்து கொண்டு கரையேறினார் தூர்வாசர்.

சமயம் அறிந்து வாய் திறவாமல் உதவி செய்ததற்காக அவர் திரௌபதியைப் பலவாறு கொண்டாடினார்.

திரௌபதி, என் மானத்தைக் காத்தாய். சமயத்தில் உன் மானத்தைக் காக்க இது ஆயிரம் வஸ்திரமாக வரும்" என்று அனுக்கிரகித்தார்பின்னர் ஒரு சமயம் துரியோதனன் சபையில் துச்சாதனன் அவளைத் துகில் உரியும்போது வஸ்திரம் முடிவே இல்லாது நீண்டு அவனைச் சோர்ந்து விழச் செய்தது முனிவரின் அனுக்கிரகமே.

 ஹரி ஓம் !!









Sunday 26 July 2020

சிவபுராணம் ( 65 )

65. தேவர்கள் கர்வபங்கம் 



தேவாசுர யுத்தத்தில் வெற்றிபெற்ற தேவர்களுக்கு அளவில்லாத அகங்காரம் ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சக்தியாலேயே அசுரர்களை வென்றதாகக் கூறிக் கொண்டனர்.

அப்போது அவர்களுக்கு நடுவே ஒரு யக்ஷம் தோன்றிற்று. அதன் நுனியோ, அடியோ தெரியவில்லை.

தேவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அதைப் பார்த்து, நீ யார்? எதற்கு இங்கு வந்திருக்கிறாய்? " என்று கேட்டனர்.

யக்ஷமோ அவர்களைப் பார்த்து, நீ யார் என்பதை முதலில் சொல்" என்று கேட்டது.

ஒவ்வொரு தேவரும் தங்கள் பெருமைகளைக் கூறிக் கொண்டார்கள்.

யக்ஷம் ஒரு தர்ப்பையைத் தரையில் போட்டது.

எத்தனையோ பெருமைகளைக் கூறிக்கொள்ளும் நீங்கள் அனைவருமே முயற்சி செய்து பாருங்கள். யாராவது இதை எடுக்க முடிகிறதா என்பதைப் பார்ப்போம்" என்றது.

தேவர்கள் அலட்சியமாக அந்தப் தர்ப்பையை எடுக்கக் குனிந்தனர். ஹூஹூம். தர்ப்பையைக் கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. வருணன் மழையைக் கொட்டினான்; தர்ப்பை நனையவில்லை. அக்கினி அனலைக் கக்கினான்தர்ப்பையைக் கொளுத்த முடியவில்லை. வாயுதேவன் புயலாக வீசினான்; தர்ப்பையோ இருந்த இடத்தைவிட்டுக் கொஞ்சமும் நகரவில்லை.

இந்த விதமாக ஒவ்வொரு தேவரும் முயற்சித்துத்  தோல்வி கண்டனர்.

அவர்கள் கர்வம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்றது. அவர்கள் அனைவரும் இவையெல்லாவற்றையும் ஒரு பக்கமாக நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நந்தி தேவனிடம்  சென்றார்கள்.

இதென்ன மாயையாக இருக்கிறது. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லையே, இந்த யக்ஷம் யார்? " என்று கேட்டனர்.

சர்வேச்வரனே இவ்வாறு தோன்றியிருக்கிறார். அவரில்லாமல் எதுவுமே இல்லை. தேவாசுர யுத்தத்தில் அவருடைய அனுக்கிரகத்தாலேயே நீங்கள் வெற்றி கண்டீர்கள். அதை உணராது அகங்காரத்தோடு இருந்த உங்களுக்கு நிலைமையை விளக்கவே பகவான் இம்மாதிரி தோன்றினார்" என்றார் நந்திதேவன்.


தேவர்கள் உண்மை உணர்ந்து தங்கள் தவறுக்கு வருந்தி, மன்னிக்கும்படி சர்வேச்வரனை வேண்டித் துதித்தனர்.

ஹரி ஓம் !!